தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை நீடிக்கும்

Published On 2023-11-28 10:28 IST   |   Update On 2023-11-28 10:28:00 IST
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
  • காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக இருக்கும் இந்த புயல் சின்னம் நாளை மேலும் வலுவடையும்.

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி தொடங்கியது. தொடா்ந்து காற்று சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சிகளால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தற்போதும் குமரிக்கடல் பகுதியில் காற்று சுழற்சியும், அரபிக்கடல் பகுதியில் சோமாலியா அருகே புயல் சின்னமும், குஜராத்தில் நிலபரப்பில் காற்று சுழற்சியும் நிலவுகிறது.

இதனால் நிலநடுக்கோட்டு பகுதியில் இருந்தும், வங்கக்கடலில் இருந்தும் மழையைத் தரும் காற்று தமிழகத்தின் ஊடாகச் செல்வதால் வட தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆங்காங்கே பலத்த மழை கொட்டியது. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 100 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

இந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5 நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்துக்கூறியபடி, தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் திங்கள்கிழமை புயல் சின்னம் உருவாகியுள்ளது. தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இருக்கும் இந்தப் புயல் சின்னம் நாளை (புதன்கிழமை) மேலும் வலுவடையும்.

அதன் பிறகு அந்த புயல் சின்னம் வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இது அடுத்த 2 நாள்களில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்தப் புயலுக்கு மியான்மா் நாடு பரிந்துரை செய்த "மிச்சாங்" என்ற பெயா் சூட்டப்படும். இந்தப் புயல் தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு வருமா அல்லது ஆந்திரம், வங்கதேசம் நோக்கி நகருமா என்பது இன்னும் இரண்டு நாள்களில் துல்லியமாகத் தெரியவரும்.

இன்று (செவ்வாய்க்கிழமை) தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது.

நாளை (புதன்கிழமை) தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, ஆழ்கடலில் உள்ள மீனவா்கள் இன்றுக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News