தமிழ்நாடு

தி.மு.க.விடம் 3 தொகுதிகளை கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி பிடிவாதம்- நாளை 2-வது கட்ட பேச்சுவார்த்தை

Published On 2024-02-26 04:27 GMT   |   Update On 2024-02-26 04:27 GMT
  • கடந்த தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது.
  • கட்டாயம் ஒரு பொதுத் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

சென்னை:

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் 3 தொகுதிகளை கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

கடந்த தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது.

இந்த முறை கூடுதலாக ஒரு பொதுத் தொகுதியை கேட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகியவற்றில் ஏதாவது ஒரு பொதுத் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலித் அல்லாத பிற சமூகத்தினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முடிவினை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எடுத்துள்ளார்.

தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது திருமாவளவன் பொதுத் தொகுதியின் அவசியத்தை விளக்கி கூறினார்.

ஆனால் தி.மு.க. தரப்பில் சிதம்பரம் மற்றும் திருவள்ளூர் தொகுதியை ஒதுக்க விரும்புகிறது. பொதுத் தொகுதியை தவிர்க்குமாறு வலியறுத்தப்பட்டது. ஆனால் கட்டாயம் ஒரு பொதுத் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

தி.மு.க. கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் விடுதலை சிறுத்தையுடன் 2-வது கட்ட பேச்சு வார்த்தைக்கு இன்னும் அழைப்பு கொடுக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது. இன்று மாலையில் புதுப்பிக்கப்பட்ட கலைஞர் நினைவிடம் திறப்பு விழா நடைபெறுவதால் நாளை (27-ந்தேதி) பேச்சு வார்த்தைக்கு அழைக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

எனவே அக்கூட்டத்தில் 3 தொகுதிகளை கேட்டு பெறுவதில் திருமாவளவன் உறுதியாக இருக்கிறார். தி.மு.க.வும் அவரது கோரிக்கையை பரிசீலிக்கும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News