தமிழ்நாடு

பா.ஜனதாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: கி.வீரமணி குற்றச்சாட்டு

Published On 2023-10-27 05:19 GMT   |   Update On 2023-10-27 05:19 GMT
  • புதுவையில் தலித் பெண் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
  • சாதியை ஒழிக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

புதுச்சேரி:

மத்திய பா.ஜனதா அரசின் குலத்தொழிலை திணிக்கும் திட்டத்தை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் தொடர் பயண பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே நடந்த பொதுக்கூட்டத்துக்கு புதுவை மாநில தலைவர் சிவ.வீரமணி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் குப்புசாமி வரவேற்றார். பொதுச்செயலாளர் துரைசந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார்.

புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-

மத்தியில் மக்கள் விரோத மோடி அரசு ஆட்சி செய்கிறது. அவர்கள் எதை சொல்லி ஆட்சிக்கு வந்தார்களோ, அதை செய்யாமல், சொல்லாததையெல்லாம் செய்து வருகின்றனர்.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை திரிசூலம் போல வைத்து ஆட்சி நடத்துகின்றனர்.

புதுவையில் தலித் பெண் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. நடிகை பல குற்றச்சாட்டுகள் கூறி பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளார்.

பா.ஜனதாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சாதியை ஒழிக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி உறுதி. தென்னிந்தியாவில் பா.ஜனதாவுக்கு கதவு சாத்தப்பட்டு விட்டது. புதுவையில் ஒப்புக்குத்தான் ஆட்சி நடக்கிறது. கயிறு வேறு இடத்தில் உள்ளது. பொம்மலாட்ட பொம்மை போல புதுவை முதலமைச்சரை ஆட வைக்கிறார்கள்.

இவ்வாறு கி.வீரமணி பேசினார்.

Tags:    

Similar News