உடன்குடியில் தயாரிக்கப்பட்டு வரும் புதிய கருப்பட்டி.
உடன்குடி கருப்பட்டி மேலும் விலை உயர்வு: கிலோ ரூ.360-க்கு விற்பனை
- உடன்குடி கருப்பட்டி கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு நீண்ட நாட்களாக விலை குறைவாகவே இருந்தது.
- இன்னும் ஒரு மாதம் மட்டுமே புதிய கருப்பட்டி உற்பத்தி இருக்கும்.
உடன்குடி:
உடன்குடி என்று சொன்னாலே கருப்பட்டி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நகரமாகும். ஊர் பெயரோடு ஊர் ஊராய் பவனி செல்லும் உடன்குடி கருப்பட்டி கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு நீண்ட நாட்களாக விலை குறைவாகவே இருந்தது.
கருப்பட்டி உற்பத்தி சீசன் முடியும் காலம் என்பதால் தற்போது கிடுகிடு என விலை உயர்ந்து விட்டது. எந்த கலப்படமும் இல்லாத ஒரிஜினல் கருப்பட்டி புதியது ஒரு கிலோ ரூ.280-க்கும், பழைய கருப்பட்டி அதாவது ஒரு வருடத்திற்கு முன்னால் உள்ள கருப்பட்டி ஒரு கிலோ ரூ.340-க்கும் விற்பனை செய்யப்பபட்டது. தற்போது மீண்டும் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்னும் ஒரு மாதம் மட்டுமே புதிய கருப்பட்டி உற்பத்தி இருக்கும் என்றும், அதற்கு பின்பு புதிய கருப்பட்டி உற்பத்தி இருக்காது என்றும் அதன் பின்பு எல்லாமே பழைய கருப்பட்டி தான் விற்பனைக்கு வரும் என்றும் வியாபாரிகள் கூறினர். இதனால் வரும் நாட்களில், கருப்பட்டி மேலும் விலை உயரும் என்று கருப்பட்டி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.