பணி ஓய்வு பெற உள்ள யானையை காணலாம்
முதுமலையில் இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெறும் 2 வளர்ப்பு யானைகள்
- கும்கி யானை, தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில், காட்டு யானைகளை பிடிக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
- வளர்ப்பு யானைகள் ஓய்வு பெறுவது, வனத்துறையை சோகமடைய செய்துள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், முதுமலை, தெப்பக்காடு, அபயாரண்யம் முகாம்களில், 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, 58 வயது பூர்த்தி அடைந்த கும்கி யானை மற்றும் தந்தம் இல்லாத ஆண் யானை (மக்னா) மூர்த்தி ஆகியவை இம்மாதத்துடன் பணி ஓய்வு பெறுகின்றன.
கும்கி யானை, தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில், காட்டு யானைகளை பிடிக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆந்திரா அரசு விருது வழங்கி கவுரவித்து உள்ளது. மக்னா யானை மூர்த்தியை, 1998 ஜூலை 12-ந் தேதி, கூடலுார் புளியாம்பாறை அருகே மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
இந்த யானை, தமிழக, கேரளா பகுதியில் 22க்கும் மேற்பட்டவர்களை தாக்கி கொன்றுள்ளது. இதை 35 வயதில் பிடித்து, வளர்ப்பு யானையாக மாற்றினர். முகாமில் சாதுவாக உலா வருகிறது. இந்த வளர்ப்பு யானைகள் ஓய்வு பெறுவது, வனத்துறையை சோகமடைய செய்துள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'ஒய்வு பெற்ற பின், இவை எவ்வித பணிகளிலும் ஈடுபடாது. வனத்துறை சார்பில், அதற்கான உணவுகள் வழக்கம் போல் வழங்கப்படும்' என்றனர்.