தமிழ்நாடு செய்திகள்

வேன் மீது லாரி மோதியது: ராமேஸ்வரம் சென்று திரும்பிய பா.ஜ.க.வினர் 16 பேர் படுகாயம்

Published On 2023-07-29 09:16 IST   |   Update On 2023-07-29 09:16:00 IST
  • அதிகாலை 3 மணியளவில் திண்டுக்கல்-வத்தலக்குண்டு பைபாஸ் ரோட்டில் வேன் வந்து கொண்டிருந்தது.
  • திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்:

ராமேஸ்வரத்தில் நேற்று பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட நடைபயண தொடக்க விழா நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சென்றனர்.

கோவை காந்திபுரம், கணபதி பகுதியை சேர்ந்த 21 பேர் ஒரு வேனில் ராமேஸ்வரம் சென்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் அவர்கள் திண்டுக்கல் நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 3 மணியளவில் திண்டுக்கல்-வத்தலக்குண்டு பைபாஸ் ரோட்டில் வேன் வந்து கொண்டிருந்தது.

வேனை பிரதாப்(26) என்பவர் ஓட்டி வந்தார். வேகத்தடையில் வேன் ஏறி இறங்கியபோது பின்னால் வந்த லாரி வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் நிலைதடுமாறி கவிழ்ந்தது. வேனில் வந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி கூச்சலிட்டனர். பின்னர் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த பிரதாப்(26), சின்னத்துரை(35), முருகன்(40), குமார்(35), பார்த்திபன்(28), சந்துரு(16), போசிகன்(17), சிவக்குமார்(40), தினேஷ்குமார்(27), தர்மதுரை(23), மகேஷ்(25), சந்தோஷ், அபி, ராஜேஸ், கணேஷ்குமார் உள்ளிட்ட 16 பேர் படுகாயமடைந்தனர்.

வேன் மீது மோதிய லாரியை ராஜபாளையத்தை சேர்ந்த குமார்(38) என்பவர் ஓட்டிவந்தார். அவருடன் சங்கரன்கோவிலை சேர்ந்த லாரிஉரிமையாளர் முருகன்(45) என்பவரும் உடன் வந்தார். லாரியில் சிமெண்ட் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடியில் இருந்து குஜிலியம்பாறை நோக்கி வந்து கொண்டிருந்தனர். விபத்தில் லாரி டிரைவர் உள்பட 2 பேரும் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகாலை நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி ஒழுங்குபடுத்தினர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News