தமிழ்நாடு

ராயப்பேட்டை அ.தி.மு.க. அலுவலக சாலையில் வாகன போக்குவரத்து சகஜ நிலை திரும்பியது

Published On 2022-07-13 10:25 GMT   |   Update On 2022-07-13 10:25 GMT
  • சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அதிமுக தலைமை கழகம் அமைந்து உள்ளது.
  • எடப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் பெரும் கலவரம் உருவானது.

சென்னை:

சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகம் முன் இன்று வாகன போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியது.

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அதிமுக தலைமை கழகம் அமைந்து உள்ளது.

கடந்த 11-ந் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக் குழுவில் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதையொட்டி ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்தை கைப்பற்ற திரண்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் பெரும் கலவரம் உருவானது.

இதனால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் கல் வீச்சு சம்பவத்தில் அடித்து நொறுக்கப்பட்டன. அ.தி.மு.க. அலுவலகம் சாலை போர்க் களம் போல காட்சி அளித்தது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். மேலும் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் ராயப்பேட்டை சாலையில் தடுப்பு வேலிகள் அமைத்து வாகனங்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த பெரும் பதட்டம் இன்று தணிந்தது.

அதிமுக தலைமை கழக அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையில் தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டு இன்று பொதுமக்கள், வாகன போக்குவரத்து தொடங்கியது. அந்த சாலை வழியாக சகஜமாக பொதுமக்கள் சென்று வந்தனர். அ.தி.மு.க. அலுவலகம் முன் உதவி கமிஷனர் தலைமையில் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News