தீபாவளி ஆடைகள் விற்பனை கொள்முதல் செய்ய திருப்பூர் காதர்பேட்டையில் குவியும் வியாபாரிகள்
- ஆடைகள் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
- தீபாவளி பண்டிகைக்கு 11 நாட்களே உள்ள நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 6 நாட்கள் நடக்கும் விற்பனையே கைகொடுக்கும்.
திருப்பூர்:
அன்றாட பயன்பாட்டில் பின்னலாடைகளின் பங்களிப்பு அதிகரித்து விட்டது. ஆண்கள், பெண்கள், முதியோர், இளைஞர், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் டீ-சர்ட், ஷார்ட்ஸ், டிராக் பேன்ட், விளையாட்டு ஆடைகள், வாக்கிங் மற்றும் ஜிம் செல்லும்போது அணியும் ஆக்டிவ் பேன்ட் மற்றும் டீ-சர்ட் என பல்வகை ஆடைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதுபோன்ற ஆடைகள் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளியையொட்டி பின்னலாடைகளை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பின்னலாடை வர்த்தகம் திருப்பூரில் சூடுபிடித்துள்ளது. டீ-சர்ட், இரவு நேர ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் ஆகியவற்றை மொத்தமாக பொதுமக்கள் வாங்கி வருகின்றனர்.
மேலும் தீபாவளி விற்பனைக்காக கடந்த ஒரு மாதமாக, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநில வியாபாரிகள் ஆடை கொள்முதல் செய்து முடித்து விட்டனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தீபாவளிக்கு முந்தைய 10 நாட்கள் ஆடை விற்பனை களைகட்டும். அதற்காக கடந்த சில நாட்களாக திருப்பூர் காதர்பேட்டை கடைகளில் விழாக்கால விற்பனைக்கான கொள்முதலும், ஆர்டர் விசாரணையும் பரபரப்பாக நடந்து வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு 11 நாட்களே உள்ள நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 6 நாட்கள் நடக்கும் விற்பனையே கைகொடுக்கும். அதற்காக குறு, சிறு வியாபாரிகள், புதிய ஆடைகளை, உள்ளாடைகளை கொள்முதல் செய்ய காதர்பேட்டை மொத்த விற்பனை கடைகளில் குவிந்து வருகின்றனர். பொதுமக்களும் ஆடைகள் வாங்க வருகின்றனர். இதனால் திருப்பூர் காதர்பேட்டை பகுதிகளை கட்ட தொடங்கி உள்ளது.