தமிழ்நாடு

ஏற்காடு அண்ணா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2023-10-01 07:34 GMT   |   Update On 2023-10-01 07:34 GMT
  • தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • செடிகள், நீர்வீழ்ச்சி முன்பு குடும்பத்துடன் நின்று செல்போன் மூலமாக செல்பி எடுத்துக்கொண்டனர்.

ஏற்காடு:

ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரிய வகை தாவரங்கள், உள்ளன. இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, பூங்கா, ஏரி என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சனிக்கிழமை, ஞாயிறு மற்றும் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி என தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் வழக்கத்தை விட இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்பட்டது.

ஏற்காடு அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

செடிகள், நீர்வீழ்ச்சி முன்பு குடும்பத்துடன் நின்று செல்போன் மூலமாக செல்பி எடுத்துக்கொண்டனர். பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மேலும் பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் விளையாடி மகிழ்ந்தனர். ஏற்காட்டில் தற்போது வானம் மேக மூட்டத்துடன் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய படகு இல்லத்தில் குவிந்தனர். அங்கு மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகில் சென்றவாறு சிலுசிலு காற்றுடன் இயற்கை காட்சிகளை ரசித்தனர். சுற்றுலா பயணிகள் அழகு சாதன பொருட்கள், அழகு செடிகள் உள்ளிட்டவைகளும் வாங்கினார்கள். தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அங்குள்ள ஓட்டல்கள், விடுதிகள், கடைகளில் வியாபாரம் களை கட்டியுள்ளது.

தற்போது தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தப்படி உள்ளது. இதனால் பெரும்பாலான தங்கும் விடுதி அறைகள் முழுவதும் நிரம்பின. இதனால முன்பதிவு செய்யாத சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர். அவர்கள் தங்களது கார்களை சாலையோரமாக நிறுத்தி அதில் உறங்கியதை காண முடிந்தது.

Tags:    

Similar News