தமிழ்நாடு செய்திகள்

குற்றாலம் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Published On 2022-11-30 09:48 IST   |   Update On 2022-11-30 09:48:00 IST
  • கருப்பாநதி அணை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது.
  • அடவிநயினார் அணை பகுதியில் சுமார் 30 மில்லிமீட்டர் மழை பெய்ததால் அணை நீர்மட்டம் 84 அடியாக உயர்ந்துள்ளது.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெரும்பாலான இடங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

ஆலங்குளம், சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள சிவகிரியில் இன்று காலை வரை பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அங்கு 57 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தது.

இதன் காரணமாக இரவு முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனைத்து அருவிகளிலும் அனுமதி வழங்கப்படவில்லை. இன்று காலை மெயினருவியை தவிர மற்ற அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

குற்றாலம் ஐந்தருவியில் பெண்கள் குளிக்கும் இடத்தையும் சேர்த்து அனைத்து கிளைகளிலும் ஐயப்ப பக்தர்கள் இன்று காலை குளித்து மகிழ்ந்தனர். மழையால் மத்தளம்பாறை அருகே உள்ள செங்குளம் முழு கொள்ளளவை எட்டியதால் அதன் மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களில் நெல் நடவுப் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அணை பகுதிகளை பொறுத்தவரை கருப்பாநதி அணை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. அங்கு இன்று காலை வரை சுமார் 45 மில்லிமீட்டர் மழை பெய்தது.

சுமார் 72.10 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 62 அடியாக உயர்ந்துள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. அடவிநயினார் அணை பகுதியில் சுமார் 30 மில்லிமீட்டர் மழை பெய்ததால் அணை நீர்மட்டம் 84 அடியாக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News