தமிழ்நாடு

கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்: புறக்கணித்த கூட்டணி கட்சிகள்

Published On 2023-01-26 15:51 GMT   |   Update On 2023-01-26 15:51 GMT
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசி தேநீர் விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
  • பொங்கல் மற்றும் சுதந்திர தினவிழா தேநீர் விருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்து இருந்தார்.

சென்னை:

தி.மு.க. அரசுக்கும், கவர்னருக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாத நிலையில், கவர்னர் நடத்திய பொங்கல் விழா மற்றும் சுதந்திர தினவிழா, தேநீர் விருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்திருந்தார். திமுக கூட்டணி கட்சிகளும் புறக்கணித்தன.

அதேபோல் குடியரசு தினத்தையொட்டி கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்திலும் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்தன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

இந்த சூழலில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசி தேநீர் விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். கவர்னரின் செயலாளர் நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அதற்கான அழைப்பிதழை வழங்கினார். அதை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலையில் கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்றார்.

சபாநாயகர் அப்பாவு, முதல்வரின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக நிர்வாகிகள் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சென்னையில் இல்லாததால், தேநீர் விருந்தில் கலந்துகொள்ளவில்லை.

முன்னதாக குடியரசு தின விழாவுக்கு வந்த கவர்னரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News