பாரத்நெட் திட்டத்திற்கு ரூ.184 கோடி- தமிழக அரசு உத்தரவு
- தமிழகத்தில் பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தும் டான்பிநெட் கழகத்திற்கு தமிழக அரசு 10 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
- அரசாணையை தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத்துறை முதன்மைச் செயலாளர் நீரஜ் மிட்டல் வெளியிட்டுள்ளார்.
சென்னை:
பாரத்நெட் என்ற தகவல் தொழில்நுட்ப திட்டத்தை தமிழகத்தில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்துகின்றன. தற்போது இந்த திட்டம், 5-வது கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் 2022-23-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் ரூ.184 கோடியை பாரத்நெட் திட்டத்திற்காக அனுமதித்துள்ளது.
இந்தத் தொகையை, தமிழகத்தில் பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தும் டான்பிநெட் கழகத்திற்கு தமிழக அரசு 10 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும், அதை வரும் மார்ச் 31-ந்தேதிக்குள் டான்பிநெட் பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்தத் தொகையை கேட்டு தமிழக அரசுக்கு டான்பிநெட் மேலாண்மை இயக்குனர் கடிதம் எழுதியிருந்தார். செயல்படுத்த இருக்கும் பாரத்நெட் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையையும் அவர் அரசுக்கு அனுப்பி இருந்தார். அதை பரிசீலித்த தமிழக அரசு, விரிவான திட்ட அறிக்கையை அங்கீகரித்ததோடு, அந்தத் தொகையை விடுவிக்கவும் ஆணையிட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத்துறை முதன்மைச் செயலாளர் நீரஜ் மிட்டல் வெளியிட்டுள்ளார்.