தமிழ்நாடு

உடல் மெலிந்த நிலையில் காணப்படும் அரிசி கொம்பன்.

உடல் மெலிந்த புகைப்படம் வைரல்: அரிசி கொம்பன் யானை நலமுடன் உள்ளது- வனத்துறை அதிகாரி தகவல்

Published On 2023-06-25 08:32 GMT   |   Update On 2023-06-25 08:32 GMT
  • யானையானது நன்றாக உணவு மற்றும் தண்ணீர் எடுத்து கொள்கிறது.
  • வனத்துறை கால்நடை டாக்டர்களின் கண்காணிப்பிலேயே யானை தொடர்ந்து இருந்து வருகிறது.

நெல்லை:

கேரளாவிலும், தேனி மாவட்டத்திலும் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அந்த யானையை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை வன சரகத்திற்குட்பட்ட அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது.

அரிசி கொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோகாலர் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, அரிசி கொம்பன் யானை மெலிந்து எலும்புகளுடன் சுற்றித்திரிவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, யானையை டாக்டர் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். தினமும் யானை சாப்பிடும் உணவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானை ஏற்கனவே இருந்த சீதோசண நிலையில் இருந்து தற்பொழுது புதிய சீதோசண நிலைக்கு வந்துள்ளது. அதன் காரணமாக உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றனர்.

இந்நிலையில் யானையின் மெலிந்த உடல் குறித்த புகைப்படங்களின் உண்மை தன்மை குறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா கூறியதாவது:-

அரிசி கொம்பன் யானை நலமுடன் உள்ளது. மெலிந்த நிலையில் இருந்தாலும், உடல் உறுப்புகள் நல்ல நிலையிலேயே உள்ளது. முன்பு அரிசி மட்டுமே சாப்பிட்டு வந்ததால் உடல் உப்பிசமாக காணப்பட்டது. தற்போது காட்டு உணவு, புல் வகைகளை சாப்பிடுவதால் வனவிலங்குகளுக்கே உரித்தான உடல் வாகுக்கு அரிசி கொம்பன் வந்து கொண்டிருக்கிறது. காட்டு விலங்குகள் இப்படித்தான் இருக்கும்.

யானையானது நன்றாக உணவு மற்றும் தண்ணீர் எடுத்து கொள்கிறது. நன்றாக நடக்கிறது. வனத்துறை கால்நடை டாக்டர்களின் கண்காணிப்பிலேயே யானை தொடர்ந்து இருந்து வருகிறது. தொலைதூரத்தில் இருந்து அதாவது 100 மீட்டர் தொலைவில் இருந்து புகைப்படம் எடுத்ததால் யானை உடல் மெலிந்து காணப்படுவதைபோல் தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News