தமிழ்நாடு செய்திகள்

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு- முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு சென்ற வாகனங்கள்

Published On 2024-06-26 11:32 IST   |   Update On 2024-06-26 11:32:00 IST
  • ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்து இயற்கை அழகை ரசிப்பார்கள்.
  • தொடர் மழை, பனிபொழிவு, குளிர்ந்த காற்றால் ஏற்காட்டில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்காடு:

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக வார விடுமுறை நாட்கள் மற்றும் அரசு தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் இருக்கும்.

ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகள் இங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து அண்ணாபூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண மலர்களை ரசித்து செல்வார்கள். மேலும் ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்து இயற்கை அழகை ரசிப்பார்கள்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் இறுதியில் கோடை விழா மலர்கண்காட்சி நடந்தது. அப்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் இந்த மாதம் 4-ந் தேதிவரை மலர்க ண்காட்சி நீட்டிக்கப்பட்டது. பின்னர் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. கடந்த வாரம் பக்ரீத் தொடர் விடுமுறை நாளில் மீண்டும் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஏற்காட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்கள் அனைத்தும் பச்சை பசேல் என காட்சி அளிக்கிறது. மேலும் தினமும் மாலை நேரங்களில் மழை பெய்வதால் இரவில் கடுங்குளிரும் நிலவி வருகிறது. இதனால் ஏற்காடு பகுதிகளில் மாலை நேரத்தில் மக்கள் நடமாட்ட மின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை ஏற்காடு மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. காலை 9 மணிவரை எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு அடர்த்தியான பனி மூட்டம் நிலவியது. இதனால் பகலில் நேரங்களிலேயே வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து சென்றனர். இதே போல் ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளிலும் இன்று பனிமூட்டம் அதிகளவில் இருந்தது. குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. தொடர் மழை, பனிபொழிவு, குளிர்ந்த காற்றால் ஏற்காட்டில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கம்பளி ஆடைகளை அணிந்து சென்று வருகிறார்கள்.

Tags:    

Similar News