காங்கயம் அருகே ஊருக்குள் புகுந்து ஆடு, மாடுகளை கடித்து கொன்ற சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிரம்
- காலை ஆடு, மாடுகள் இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் பீதியில் உறைந்தனர்.
- சுற்றுவட்டார விவசாயிகள், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊதியூர் அருகே மலையடிவாரத்தில் உள்ள தாயம்பாளையத்தை சேர்ந்த ரத்தினசாமி என்ற விவசாயின் தோட்டத்தில் உள்ள ஆட்டுப்பட்டியில் கடந்த 3ந்தேதி இரவு ஒரு செம்மறியாடு காணாமல் போனது.
சற்று தூரத்தில் கழுத்துப்பகுதி கடிக்கப்பட்ட நிலையில் ஆடு இறந்து கிடந்தது. சிறுத்தை, நாய் போன்ற விலங்கினங்கள் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அப்பகுதியில் காங்கயம் வனத்துறையினர் கேமரா வைத்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் செங்கோடம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்ரமணி என்பவரின் தோட்டத்தில் இருந்த கன்றுக்குட்டியை ஒரு விலங்கு கடித்து கொன்றது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் சிறுத்தை அடித்துக்கொன்றதாக தெரிவித்தனர். எனவே சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இன்று காலை ஊதியூர் அடுத்த காசிலிங்கம்பாளையத்தில் சாமிநாதன் என்பவரது தோட்டத்தில் இருந்த 2மாத கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்து கொன்று 300 அடி தூரம் இழுத்து சென்றுள்ளது. அங்கு வேலி இருந்ததால் கன்றுக்குட்டியை அங்கேயே போட்டு விட்டு சென்றது. மேலும் ஆடு, மாடுகளை கடித்து கொன்றுள்ளது. இன்று காலை ஆடு, மாடுகள் இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் பீதியில் உறைந்தனர்.
இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காங்கயம் ரேஞ்சர் தனபாலன், வனத்துறை அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேஸ்வரி உள்ளிட்ட குழுவினர் வட்டமலை பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். உடுமலை வனச்சரகத்தில் இருந்து 10 பேர் கொண்ட குழுவினர் வர வழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். கூண்டு வைத்து பிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 5 கி.மீ., சுற்றளவுக்கு கண்காணித்து வருகிறோம். கண்டறியப்பட்ட கால்தடத்தின் அடிப்படையில் சிறுத்தையாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். சுற்றுவட்டார விவசாயிகள், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றனர்.
இதனிடையே வட்டமலைப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மாலை 4மணிக்கு மேல் மலைக்கும், மலை மேல் உள்ள கோவில்களுக்கும் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் செல்லக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளனர்.
வட்டமலைப்பாளையம் பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தை கரூர் வனப்பகுதியில் இருந்து இங்குவந்துள்ளது. ஊருக்குள் சிறுத்தை புகுந்துள்ளதால் பொதுமக்கள் பீதியில் தவித்து வருகின்றனர்.