போடியில் இன்று 11 கையெறி குண்டுகளுடன் வாலிபர் கைது
- பிடிபட்ட நபர் வைத்திருந்த பையில் சோதனை நடத்தியபோது அதில் 11 கையெறி குண்டுகள் இருந்தது தெரிய வந்தது.
- தப்பி ஓடியவர் இவரது கூட்டாளி எனவும் தெரிய வந்தது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 2 வாலிபர்கள் பையுடன் சுற்றிக்கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். இதனை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட நபர் வைத்திருந்த பையில் சோதனை நடத்தியபோது அதில் 11 கையெறி குண்டுகள் இருந்தது தெரிய வந்தது.
இதனை பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை விரட்ட வைத்திருந்ததாக அவர் கூறினார். பிடிபட்டவர் போடியை சேர்ந்த சடையன் (வயது40) என்பதும் தப்பி ஓடியவர் இவரது கூட்டாளி எனவும் தெரிய வந்தது. உண்மையில் இந்த கையெறி குண்டுகளை பன்றிகளை பிடிப்பதற்காக வைத்திருந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக வைத்திருந்தாரா? என விசாரித்து வருகின்றனர்.