தமிழ்நாடு

காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க 23 நடமாடும் வாகனங்கள்- மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Published On 2022-07-01 10:02 GMT   |   Update On 2022-07-01 10:02 GMT
  • 10 எக்ஸ்ரே எடுக்கும் திறன் உள்ள இவ்வாகனங்களின் மூலம் நடப்பாண்டில் 5 லட்சம் நபர்களுக்கு காச நோய் கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.
  • 8 காசநோய் துணை இயக்குநர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

சென்னை:

2025-ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லா தமிழகம் என்ற இலக்கை அடைய தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, காசநோய் உள்ள இடங்களில் வசிப்பவர்களிடம் காச நோய் உள்ளதா என்பதை கண்டறிய, முதல் கட்டமாக 14 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

தற்போது இரண்டாம் கட்டமாக 23 மாவட்டங்களுக்கு தலா ரூ.46 லட்சம் வீதம், ரூ. 10 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியுடன் கூடிய 23 நடமாடும் வாகனங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதை சென்னை நொச்சிக்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இவ்வாகனம் ஏழை எளிய மக்களைத் தேடிச் சென்று காசநோய் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களான நெரிசலான குடியிருப்புப் பகுதிகள், முதியோர் இல்லங்கள், தொழிற்சாலைகள் மற்றும் காசநோய் ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில், காசநோய் கண்டறிவதற்கு பயன் படுத்தப்படும்.

காசநோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள், மருந்துகள், ரூ. 500 உதவித்தொகை மற்றும் தொடர் கண்காணிப்பு சேவை வழங்கப்படுவதோடு, அங்குள்ள மக்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்தும் தெரிவிக்கப்படும்.

ஒரு மணி நேரத்தில் 10 எக்ஸ்ரே எடுக்கும் திறன் உள்ள இவ்வாகனங்களின் மூலம் நடப்பாண்டில் 5 லட்சம் நபர்களுக்கு காச நோய் கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கியதோடு மூன்று காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கினார். 8 காசநோய் துணை இயக்குநர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் உதயநிதி ஸ்டாலின், வேலு, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News