சேவ் கேரளா பிரிக்கேட் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘பெரியாறு’ ஆவண பட போஸ்டர்.
கேரளாவில் மீண்டும் பெரியாறு அணை குறித்து விஷம பிரசாரம்
- பெரியாறு என்ற பெயரில் உள்ள ஆவண படத்தில் அணை உடைந்து ஏராளமான கேரள மக்கள் பலியாவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
- விஷம பிரசார குறும்படம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கூடலூர்:
கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணை தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
152 அடி உயரம் கொண்ட பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பேபி அணையை பலப்படுத்தி நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளது.
அணையை கண்காணிப்பதற்காக மூவர் குழு அவர்களுக்கு துணையாக 5 பேர் கொண்ட துணைக்குழுவும் அமைக்கப்பட்டது. பருவமழை காலத்தில் அணைப்பகுதியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர். இதில் அணை உறுதியாக உள்ளது என பல முறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் கேரள அரசு மற்றும் சில தன்னார்வ அமைப்பினர் முல்லைப்பெரியாறு அணை குறித்து அவ்வப்போது விஷம பிரசாரம் செய்து வருகின்றனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு டேம்-999 என்ற ஆவண படம் வெளியிடப்பட்டது. இதில் முல்லைப்பெரியாறு அணை உடைவதுபோன்று கிராபிக்ஸ் காட்சிகளை வைத்து பாடல்களை வெளியிட்டனர். கேரளாவை சேர்ந்த வக்கீல் ரசூல்ஜோய் அணை உடைந்து விடும் எனவே புதிய அணை கட்ட வேண்டும் என கையெழுத்து இயக்கத்தை நடத்தினார்.
இந்நிலையில் அவர் சார்பில் புதிய குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. பெரியாறு என்ற பெயரில் உள்ள ஆவண படத்தில் அணை உடைந்து ஏராளமான கேரள மக்கள் பலியாவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷம பிரசார குறும்படம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழக-கேரள மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக தமிழக விவசாயிகள் கொந்தளித்துள்ளனர். இது குறித்து ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு, வைகை பாசன விவசாய சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் கூறுகையில், கேரள மக்களிடையே பெரியாறு அணை குறித்து பொய் பிரசாரம் செய்து வரும் சேவ் கேரளா பிரிக்கேட் அமைப்பு மற்றும் அதன் தலைவர் ரசூல்ஜோயை வண்மையாக கண்டிக்கின்றோம்.
உச்ச நீதிமன்றத்தின் 11 நீதிபதிகளும், 7 நீர்பாசன தலைமை பொறியாளர்களும் தலைசிறந்த அணை வல்லுனர்களும் சேர்ந்து முல்லைப்பெரியாறு அணையை சோதனை செய்து அணை பலமாக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதன் அடிப்படையில்தான் அணை நீர்மட்டத்தை 142 வரை உயர்த்த உத்தரவிடப்பட்டது. இந்த சூழ்நிலையில் இருமாநில மக்களின் நல்லுறவை கெடுக்கின்ற வகையிலும் பிரிவினையை தூண்டும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பெரியாறு குறும்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட நபர்களை தேசிய பாதுகாபாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார்.
சேவ் கேரளா பிரிக்கேட் அமைப்பினர் ஆவண படம் தயாரிக்க ரூ.30 லட்சம் தேவை என்றும் அதற்கு நன்கொடை அனுப்பி வைக்குமாறு வங்கி கணக்கை தொடங்கி வசூல் வேட்டையை தொடங்கினர். இதை அறியாத சிலர் அவர்களுக்கு நன்கொடை வழங்கினர். வெளிநாடு வாழ் கேரள மக்களிடமும் நிதி வசூல் செய்ய முயன்றனர். ஆனால் இவர்கள் போலி பிரசாரம் செய்வதால் யாரும் பணம் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.