ராஜபாளையம் அருகே விளைநிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
- காட்டுயானைகள் அட்டகாசத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நாசமானது.
- கடந்த 3 நாட்களாக இந்த பகுதியில் யானை கூட்டம்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கல்லாத்து காடு உள்ளது. இங்குள்ள விளைநிலங்களுக்குள் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
கல்லாத்துக்காடு பகுதியில் தர்மபுரம் தெருவைச் சேர்ந்த முத்து பாலா ராஜா என்பவர் வாழை, தென்னை, மா, பலா மரங்களை விவசாயம் செய்து வருகிறார். இவரது தோப்பிற்குள் கடந்த 3 தினங்களாக தொடர்ந்து காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
காட்டுயானைகள் அட்டகாசத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நாசமானது.மேலும் காட்டுயானைகள் பலா மரத்தில் காய்த்துக் கிடந்த பலாக் காய்களை கீழே தள்ளி மிதித்தும், கம்பி வேலிகளை தகர்த்து எறிந்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.
இதுகுறித்து வனத்துறையினரிடம் முத்து பாலா ராஜா பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் கடும் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த 3 நாட்களாக இந்த பகுதியில் யானை கூட்டங்கள் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருவதால் மின் வேலி அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.