பதவி ஆசையில் விஜயதாரணி பாரதிய ஜனதாவுக்கு ஓட்டம்- விஜய் வசந்த் எம்.பி. தாக்கு
- மீனவர்களின் படகுகளை விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
- மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. மேலும் மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து நாட்டுடமையாக்கி வருகிறது. இதற்கிடையே புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ள இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்துள்ளது.
அவர்களுக்கு தண்டனை வழங்குவதை கண்டித்தும், மீனவர்களின் படகுகளை விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்தநிலையில் மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்து பாம்பன் தெற்கு வாடி துறைமுக கடற்கரையில் மீனவ காங்கிரஸ் சார்பில் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், பதவி ஆசையில் விஜயதாரணி எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.
இந்த போராட்டத்தில் மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்ணாண்டோ, தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் உள்பட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.