விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு: 26-ந்தேதி ஆலோசனை கூட்டம்
- வழக்கறிஞர் அணியின் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 2 நாட்கள் நடந்தது.
- மக்கள் நல பணிகளில் ஈடுபடும் இயக்க நிர்வாகிகளை சென்னையில் நேரில் அழைத்து பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தினார்.
சென்னை:
நடிகர் விஜய் மக்கள் இயக்க பணிகள் ஒவ்வொன்றும் பெரிய அரசியல் கட்சிகளுக்கு நிகராகும் வகையில் அமைந்து வருகிறது.
மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு, பட்டினி தினத்தையொட்டி அன்னதானம், தலைவர்கள் சிலைக்கு மாலை மற்றும் ஏழை மாணவ-மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த தளபதி விஜய் பயிலகம் என்ற பெயரில் டியூசன் சென்டர், அடுத்ததாக அடித்தட்டு மக்களுக்காக இலவச சட்ட உதவி மையம் என பல்வேறு மக்கள் நல திட்டங்களை செய்து வருகிறார்.
மக்கள் நல பணிகளில் ஈடுபடும் இயக்க நிர்வாகிகளை சென்னையில் நேரில் அழைத்து பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தினார்.
தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தை மேலும் வலுப்படுத்த அரசியல் கட்சிகள் உள்ளது போல் அணிகளை உருவாக்கி அதற்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இயக்கத்தினரை ஊக்கப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு வழக்கறிஞர் அணியின் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 2 நாட்கள் நடந்தது.
கூட்டத்தில் இயக்கத்திற்கும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு ஏற்படும் சட்ட ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அடுத்ததாக வருகிற சனிக்கிழமை இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணி அறிமுகப்படுத்தப்பட்டு அந்த அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:-
விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை விஜய் ஆலோசனையின்படி செய்து வருகிறோம். இதில் மக்கள் இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் உற்சாகமாக மக்கள் நல பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து இயக்கத்தின் வழக்கறிஞர் அணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் 2 நாட்கள் நடந்தது.
இதைத்தொடர்ந்து மக்கள் இயக்க செயல்பாடுகளை சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கும், இயக்கத்தினருக்கும் செயல்படுத்தும் நோக்கத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 26-ந்தேதி காலை 8.55 மணிக்கு பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் சுமார் 1200 பேர் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.