தமிழ்நாடு செய்திகள்

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் விரிவுப்பணி இந்த மாத இறுதியில் முடியும்

Published On 2023-07-15 11:19 IST   |   Update On 2023-07-15 11:19:00 IST
  • பறக்கும் ரெயில் திட்டம் நீட்டிப்புக்கு திட்டமதிப்பீடு ரூ.734 கோடியாக மாற்றி அமைக்கப்பட்டு ரெயில்வே ஒப்புதல் அளித்தது.
  • தில்லை கங்கா நகர் பகுதியில் தூண்கள் அமைக்கப்பட்டு, மேம்பால இணைப்பு பணிகள் முடிந்துவிட்டன.

வேளச்சேரி:

சென்னை கடற்கரை- வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் சேவை உள்ளது. இந்த ரெயில் சேவையை பரங்கிமலை வரை 5 கிலோ மீட்டருக்கு நீட்டிக்கும் பணி கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையிலான 500 மீட்டர் தூர பணியில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த பணி கிடப்பில் போடப்பட்டது. இந்தநிலையில் கிடப்பில் போடப்பட்ட ஆதம்பாக்கத்தில் இருந்து 500 மீட்டருக்கான பறக்கும் ரெயில் திட்டப் பணியில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்து மீண்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பறக்கும் ரெயில் திட்டம் நீட்டிப்புக்கு திட்டமதிப்பீடு ரூ.734 கோடியாக மாற்றி அமைக்கப்பட்டு ரெயில்வே ஒப்புதல் அளித்தது.

இதற்கிடையே இதற்காக தில்லை கங்கா நகர் பகுதியில் தூண்கள் அமைக்கப்பட்டு, மேம்பால இணைப்பு பணிகள் முடிந்துவிட்டன. மேலும் மீதமுள்ள பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆதம்பாக்கம்-பரங்கிமலை ரெயில் நிலையங்களுக்கு இடையே 500 மீட்டர் தூரத்தில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்டப் பாதை, பறக்கும் ரெயில் பாதையை கடக்கிறது. எனவே இந்த ரெயில் பாதை பணியை தெற்கு ரயில்வே மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

சென்னை கடற்கரை-தாம்பரம் புறநகர் மின்சார ரெயில், கடற்கரை- பரங்கிமலை பறக்கும் ரெயில் மற்றும் சென்ட்ரல்-பரங்கிமலை மெட்ரோ ரெயில் சேவை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில், பரங்கிமலையில் புதிய ரெயில் முனையம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதன்மூலம், மெட்ரோ, புறநகர் மற்றும் பறக்கும் ரெயில் பயணிகள் பரங்கிமலையில் இருந்து தாங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு எளிதில் செல்ல முடியும். இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் அனைத்தும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுமானப் பணிகள் முடிந்ததும் தண்டவாளங்களை ஆய்வு செய்து, சேவைகளை இயக்க ஒப்புதல் அளிக்குமாறு தெற்கு கோட்டத்தின் (பெங்களூர்) ரெயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் கோரிக்கை வைக்கப்படும். இதன் பின்னர் ஆய்வு முடிவடைந்து ரெயில் சேவை தொடங்கப்படும்.

Tags:    

Similar News