தமிழ்நாடு

செல்போன் உரையாடல் ஒட்டு கேட்பு விவகாரம்: வெள்ளை அறிக்கை வெளியிட அ.தி.மு.க. வலியுறுத்தல்

Published On 2024-04-18 09:18 GMT   |   Update On 2024-04-18 09:18 GMT
  • உளவுத்துறையினர் ஒட்டு கேட்டு ஆளுங்கட்சியினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.
  • உளவு அமைப்பை போதை பொருட்கள் நடமாட்டம், ரவுடிகளை பிடிப்பதில் கவனம் செலுத்தாமல் அடியாட்கள் போல பயன்படுத்தி வருகின்றனர்.

நெல்லை:

அ.தி.மு.க மாநில வக்கீல் பிரிவு செயலாளர் இன்ப துரை நெல்லையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக உளவுத்துறையினர் அ.தி.மு.க தலைவர்கள் முதல் வட்ட செயலாளர்கள் வரை செல்போனில் பேசுவதை ஒட்டு கேட்கும் விவகாரம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதற்காக ரூ. 40 கோடி மதிப்பில் உளவு சாதனம் ஒன்றை இறக்குமதி செய்து நாங்கள் பேசுவதை கண்காணித்து ஆளுங்கட்சியினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக நான் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து 5 நாட்கள் ஆகிவிட்டது. தேர்தல் ஆணையமோ, உள்துறை செயலாளரோ, தமிழக முதலமைச்சரோ யாரும் இதுவரை பதில் அளிக்கவில்லை.

எனது புகார் மனு மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் தேர்தல் சமயத்தில் எங்களது வெற்றிக்கு பல்வேறு வியூகங்கள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் உரையாடல் நடத்துவோம். அதனை உளவுத்துறையினர் ஒட்டு கேட்டு ஆளுங்கட்சியினருக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.

உளவு அமைப்பை போதை பொருட்கள் நடமாட்டம், ரவுடிகளை பிடிப்பதில் கவனம் செலுத்தாமல் அடியாட்கள் போல பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணைய அதிகாரியிடம் செல்போனில் இன்று காலை தொடர்பு கொண்டு கேட்டபோது இன்று மாலைக்குள் தமிழக தேர்தல் ஆணையம் பதில் தெரிவிப்பதாக கூறியுள்ளார்கள்.

இன்று மாலைக்குள் பதில் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் நேற்று நெல்லையில் இருந்து நாங்குநேரி வழியாக ராதாபுரம் தொகுதிக்கு ஒரு கோடி ரூபாய் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ராதாபுரத்தை சேர்ந்த ஒரு முக்கிய நிர்வாகிக்கு இந்த பணம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதனை பறக்கும் படையினர் சோதனை செய்யவில்லை.

அதே நேரத்தில் நாங்குநேரி போலீசில் பிடிபட்ட அந்த பணத்தின் மதிப்பு ரூ. 28 லட்சம் வரை மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளது.

இது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த பணம் யாருடையது? எதற்காக கொண்டு செல்லப்பட்டது? என்பது குறித்து விரிவான விசாரணை தேவை. அந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் முறையான விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை தெரிவிக்க வேண்டும்.

அ.தி.மு.க.வினரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் கெடு விதிக்கிறேன். நான் கொடுத்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை செயலாளரும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News