தமிழ்நாடு

இலவசமாக மது கொடுக்காததால் டாஸ்மாக் பார் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- 4 பேர் கைது

Published On 2023-03-25 08:59 GMT   |   Update On 2023-03-25 08:59 GMT
  • பாஸ்கர் மது பாட்டில் கொடுக்க மறுத்து அவர்களை தட்டிக்கேட்டார்.
  • புகழேந்திரன், அஜித் ஆகியோர் நேற்று நள்ளிரவு பாஸ்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு ஓடினர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள தேவூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 50). இவர் தேவூரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பார் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று மதியம் எரும்புகண்ணியை சேர்ந்த புகழேந்திரன், பட்டமங்கலத்தை சேர்ந்த அஜித் ஆகிய 2 பேரும் அங்கு வந்து பாஸ்கரை கத்தியை காட்டி மிரட்டி இலவசமாக மதுபாட்டில் கொடுக்க வேண்டும் எனக்கூறி தகராறில் ஈடுபட்டனர். ஆனால் பாஸ்கர் மது பாட்டில் கொடுக்க மறுத்து அவர்களை தட்டிக்கேட்டார்.

அதன் பிறகு 2 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து கடை மேற்பார்வையாளர் விஜயகுமார் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த புகழேந்திரன், அஜித் ஆகியோர் நேற்று நள்ளிரவு பாஸ்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு ஓடினர். இதில் வீட்டின் முன்புறம் தீ பற்றி எரிந்தது.

சத்தம் கேட்டவுடன் அங்கு தூங்கி கொண்டிருந்த பாஸ்கரின் மாமனார் பாலசுந்தரம் கண்விழித்து எழுந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். இந்த குண்டு வீச்சில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை.

இது பற்றி கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் பாஸ்கர் புகார் அளித்தார்.

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து புகழேந்திரன், அஜித் மற்றும் இதில் தொடர்புடைய 2 பேர் என மொத்தம் 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News