தமிழ்நாடு

சித்த மருத்துவ பல்கலை. மசோதா- ஆளுநரின் கேள்விகளுக்கு தமிழக அரசு விரைவில் பதில்

Published On 2022-09-03 06:52 GMT   |   Update On 2022-09-03 06:52 GMT
  • சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பாக சில விளக்கங்களை ஆளுநர் கேட்டுள்ளார்.
  • கவர்னர் ஒப்புதல் தந்த பிறகு மாதவரத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்கான கட்டிட பணிகள் தொடங்கப்படும்.

சென்னை மாதவரத்தில் சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபையில் மசோதா கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. பிறகு அந்த மசோதா கவர்னர் ஒப்பதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக கவர்னர் ஆர்.என். ரவி கடந்த 4 மாதங்களாக ஆய்வு நடத்தினார். சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் பற்றியும் அவர் நிபுணர்களுடன் விவாதித்தார். அதில் அவருக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து கவர்னர் ரவி அந்த சட்ட மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளார். சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பாக சில விளக்கங்களை அவர் கேட்டுள்ளார். இதை சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று உறுதி செய்தார்.

இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணி யன் கூறியதாவது:-

கவர்னர் சில விளக்கங்கள் கேட்டு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளார். இது தொடர்பாக நாங்கள் சட்ட நிபுணர்களுடன் விரிவாக ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் விளக்கங்களுடன் பதில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த பதிலை தலைமை செயலாளர் பார்வைக்கு அனுப்பி இருக்கிறேன். அவர் சரிபார்த்து தந்ததும், மீண்டும் அது என் பார்வைக்கு வரும். அதன் பிறகு நான் அந்த பதில் விளக்கங்களை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து செல்வேன்.

அதற்கு பிறகு தமிழக அரசின் பதில் விளக்கம் முறைப்படி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும். அதை ஏற்று கவர்னர் அனுமதி வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.

கவர்னர் ஒப்புதல் தந்த பிறகு மாதவரத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்கான கட்டிட பணிகள் தொடங்கப்படும். அதுவரை இந்த பல்கலைக்கழகத்தின் அலுவலகங்கள் அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா மருத்துவமனையில் செயல்படும்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிலையில், சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா குறித்த ஆளுநரின் கேள்விகளுக்கு தமிழக அரசு விரைவில் பதில் அளிக்க உள்ளது. ஆளுநரின் கேள்விகளுக்கு மருத்துவமத்துறை அதிகாரிகள் பதில் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News