தமிழ்நாடு

தாம்பரம் அருகே இன்று காலை 'ஜாக்கியால்' வீட்டை தூக்கியபோது கட்டிடம் இடிந்து தொழிலாளி பலி

Published On 2023-05-24 08:19 GMT   |   Update On 2023-05-24 08:19 GMT
  • தாம்பரம் அடுத்த சேலையூர் கர்ணன் தெருவில் லஷ்மி என்பருக்கு சொந்தமான 2 மாடி வீடு உள்ளது.
  • வீட்டை இடிக்காமல் அதனை ஜாக்கி மூலம் உயர்த்த அதன் உரிமையாளர் முடிவு செய்தார்.

தாம்பரம்:

தாம்பரம் அடுத்த சேலையூர் கர்ணன் தெருவில் லஷ்மி என்பருக்கு சொந்தமான 2 மாடி வீடு உள்ளது. பழமையான இந்த வீடு சாலையின் அளவுக்கு தாழ்வாக இருப்பதால் மழை நீர் அடிக்கடி வீட்டுக்குள் புகுந்தது.

இதனால் வீட்டை இடிக்காமல் அதனை ஜாக்கி மூலம் உயர்த்த அதன் உரிமையாளர் முடிவு செய்தார். இதற்கான பணியை உத்தர பிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் மேற் கொண்டது. கடந்த சில நாட்களாக ஜாக்கியின் மூலம் வீட்டை உயர்த்தும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை வடமாநில தொழிலாளி பேஸ்கார்(28) உள்ளிட்ட தொழிலாளர்கள் ஜாக்கிமூலம் கட்டிடத்தை மேலும் உயர்த்தினர். அப்போது திடீரென கட்டிடத்தின் ஒருபக்க சுவர் இடிந்து சரிந்து விழுந்தது,

இந்த இடிபாடுகளில் பேஸ்கார் உள்பட 3 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதனை கண்டு மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தாம்பரம், மேடவாக்கம் தீயணைப்பு நிலையங்களுக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தொழிலாளி பேஸ்கார் இடிபாடுகளில் சிக்கி பலியாகி கிடந்தார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மேலும் கட்டிட இடிபாடில் சிக்கிய தொழிலாளி ஓம்கார் என்பவருக்கு கால் எலும்பு முறிந்தது. மேலும் மற்றொருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கட்டிடத்தை உயர்த்தியபோது அங்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட தொழிலாள்கள் வேலைபார்த்து உள்ளனர். அதிர்ஷ்டவசமாக கட்டிடம் முழுவதும் இடியாமல் ஒரு பகுதி மட்டும் இடிந்ததால் மற்ற தொழிலாளர்கள் உயிர்தப்பினர்.

இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News