தமிழ்நாடு

மாணவியை கொலை செய்த வாலிபருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்- உறவுக்கார பெண் ஆவேசம்

Published On 2022-10-14 06:26 GMT   |   Update On 2022-10-14 06:26 GMT
  • சத்திய பிரியா கல்லூரிக்கு செல்லும் போது தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்.
  • கடந்த 4 மாதங்களுக்கு முன்பு போலீசில் புகார் செய்தோம்.

சென்னை:

மாணவி சத்திய பிரியா படுகொலை சம்பவம் அவரது குடும்பத்தினடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மாணவி சத்தியபிரியாவின் தாயார் காவல் துறையில் ஏட்டாக இருக்கிறார். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், உறவினர்களும் நிறைய பேர் போலீஸ் துறையிலேயே பணிபுரிகிறார்கள்.

அவரது உறவினரான பெண் போலீஸ் ஒருவர் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பில் சத்திய பிரியாவின் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அதே குடியிருப்பில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தயாளனின் மகன் சதீஷ் வசித்து வருகிறார்.

அவர் வேலைக்கு செல்லாமல் ஊரை சுற்றி வருவார். சத்திய பிரியா கல்லூரிக்கு செல்லும் போது தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்.

இது தொடர்பாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு போலீசில் புகார் செய்தோம். அப்போது போலீசார் சதீசை அழைத்து விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு சத்திய பிரியாவின் தாயாரை சதீஷ் நேரில் சந்தித்து இனி நான் சத்திய பிரியாவை தொந்தரவு செய்யமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

சத்திய பிரியா வெளியில் செல்லும் போது தொடர்ந்து தொந்தரவு செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை மட்டும் நடத்தினார்கள். வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. ஒரு வேளை போலீசார் விசாரணை நடத்தி சதீஷ் மீது கைது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த படுகொலை சம்பவம் நடக்காமல் இருந்திருக்கலாம்.

எங்கள் குடும்பத்தினரும் பலமுறை சதீசை கண்டித்துள்ளோம். ஆனால் அவர் கேட்கவில்லை.

இத்தனை ஆண்டு காலம் வளர்த்து எந்த தவறும் செய்யாத நிலையில் சத்திய பிரியாவை சதீஷ் கொடூரமாக கொன்றுள்ளார். எனவே அவருக்கு மரண தண்டனை வழங்கினாலும் தவறு இல்லை. சதீஷ் நடவடிக்கை தொடர்பாக அவரது தாயார், சகோதரி ஆகியோரிடமும் தெரிவித்துள்ளோம். அவர்களும் அவரை உரிய முறையில் கண்டிக்கவில்லை. எனவே அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News