தமிழ்நாடு செய்திகள்

பெரியகுளத்தில் திருச்சி மாநாட்டுக்காக வைத்த ஓ.பி.எஸ்.பேனர்கள் அகற்றம்

Published On 2023-04-24 10:29 IST   |   Update On 2023-04-24 11:05:00 IST
  • திருச்சியில் இன்று முப்பெரும் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
  • மறுபுறம் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மக்களை திரட்டி 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் இன்று திருச்சிக்கு செல்ல ஆயத்தம் ஆகினர்.

பெரியகுளம்:

அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை யார்? என்பதை தீர்மானிக்க கடும் போட்டி நிலவிய நிலையில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் கட்சியில் தனது செல்வாக்கை நிரூபிக்க தொண்டர்களை சந்திக்கப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இதனையடுத்து திருச்சியில் இன்று முப்பெரும் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அவரது ஆதரவாளர்கள் திருச்சி மாநாட்டுக்கு தொண்டர்களை வரவேற்று பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்தனர்.

அந்த பேனரில் ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி குனிந்து வணங்குவதுபோல புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பேனர்களை அகற்ற வடகரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பேனர்களை அகற்றாவிட்டால் நாங்களே கிழித்து எரிந்துவிடுவோம். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களே தாங்கள் வைத்த பேனர்களை அகற்றினர். இச்சம்பவத்தால் பெரியகுளத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் மாவட்டத்தின் ஒருசில இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற வலியுறுத்தி அ.தி.மு.க. நிர்வாகிகள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மறுபுறம் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மக்களை திரட்டி 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் இன்று திருச்சிக்கு செல்ல ஆயத்தம் ஆகினர்.

Tags:    

Similar News