தமிழ்நாடு

கோப்பு படம்

புழல் அருகே தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளியில் இடநெருக்கடியால் மாணவர்கள் அவதி

Published On 2022-06-27 08:45 GMT   |   Update On 2022-06-27 08:45 GMT
  • பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே முழு நேரமும் வகுப்புகள் நடந்து வருகின்றன.

புழல் அடுத்த காவாங்கரை, கண்ணப்பசாமிநகரில் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 950 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 25 ஆசிரியர்கள் உள்ளனர்.

இப்பள்ளி கடந்த 1989-ம் ஆண்டு புழல் ஊராட்சி ஒன்றிய ஆரம் பள்ளியாக தொடங்கப்பட்டு பின்னர் 2006-ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாகவும், 2017-ம் ஆண்டு உயர் நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 10-ம் வகுப்பு வரை செயல்படும் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டாலும் பள்ளியில் தனியாக இடம் ஒதுக்கி கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

இதனால் ஏற்கனவே இருந்த அதே கட்டிடத்தில் கூடுதல் வகுப்பறைகள் செயல்பட்டு வருகிறது. இதன்காரணமாக கடும் இட நெருக்கடி ஏற்பட்டு மாணவ- மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே முழு நேரமும் வகுப்புகள் நடந்து வருகின்றன. மற்ற மாண வர்களுக்கு கொரோனா காலத்தை போல பாதி நேரமே வகுப்புகள் செயல்படுகின்றன. காலையில் இருந்து மதியம் வரை சில வகுப்புகளும் மதியத்துக்கு மேல் சில வகுப்புகளும் செயல்படு கின்றன. இதனால் மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் கல்வியின் தரம் குறித்து கவலை அடைந்துள்ளனர்.

ஆசிரியர்களின் முயற்சியால் சில தன்னார்வலர்களின் உதவியுடன் பள்ளிக்கு தேவையான உதவிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு குளிர்பானம், உணவு, காலணி போன்றவை வழங்கி அவர்கள் உற்சாகப்படுத்தி வருகின்றனர். பெரும் சிரமத்தில் உள்ள இப்பள்ளி சமீபத்தில் நடந்த 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 95 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாண வர்களின் பெற்றோர் கூறியதாவது:-

காவாங்கரையில் 10-ம் வகுப்பு வரை செயல்படும் ஒரே அரசு பள்ளி இந்த பள்ளிதான். இப்பள்ளியில் தமிழ், ஆங்கில வழி என இரண்டும் கற்றுத் தருவதால் பணம் செலவு செய்து தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டிய கவலை இல்லாமல் இங்கு சேர்த்து படிக்க வைத்தோம்.

ஆனால் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப பட்ட நிலையில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தராமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனால் இட நெருக்கடி ஏற்பட்டு மாணவ- மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News