தமிழ்நாடு

மன அழுத்தத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2022-07-29 08:56 GMT   |   Update On 2022-07-29 08:56 GMT
  • கூடுதல் சிறப்பு வகுப்புகளை நடத்தி மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கக் கூடாது என்பன போன்ற அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு வழங்க வேண்டும்.
  • பெற்றோரும் தங்களின் விருப்பங்களையும், கனவுகளையும் பிள்ளைகள் மீது திணிப்பதை தவிர்க்க வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்மமரணம் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியும், விளைவுகளும் தணிவதற்கு முன்பே, 3 நாட்களில் நான்கு மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகுந்த வேதனையும், கவலையும் அளிக்கிறது. இத்தகைய நிகழ்வுகள் சங்கிலித் தொடராக மாறிவிடாமல் தடுக்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகும்.

பெரும்பான்மையான பெற்றோர்கள் தங்களின் வாரிசுகளை குழந்தைகளாகப் பார்க்காமல் மதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாகவே பார்க்கின்றனர். அதனால், வீடுகளிலும் அவர்களை இயல்பாக இருக்க விடாமல், எல்லா நேரங்களிலும் படிக்கும்படி கட்டாயப்படுத்துகின்றனர்.

கடந்த இரு ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்புகள் கடினமானதாக இருந்தாலும், தேர்வுகள் கடினமானதாக இல்லை;

ஆனால், இப்போது நிலைமை திடீரென மாறி மருத்துவப் படிப்புக்கு தயாராக வேண்டும், அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பன போன்ற அழுத்தங்களை மாணவச் செல்வங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதுவே தற்கொலைகளுக்கு காரணமாகும்.

இதைத் தடுக்க வேண்டுமானால், மன அழுத்தத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும். அதற்காக, குறைந்தபட்சம் மேல்நிலை மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வுகள் வழங்கப்பட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது உயர்நிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும்.

கூடுதல் சிறப்பு வகுப்புகளை நடத்தி மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கக் கூடாது என்பன போன்ற அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். பெற்றோரும் தங்களின் விருப்பங்களையும், கனவுகளையும் பிள்ளைகள் மீது திணிப்பதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் புத்திசாலிகள்; அவர்களுக்கு கனவுகள் உண்டு; அந்த கனவை நனவாக்குவதற்காக அவர்கள் விருப்பப்பட்டு படிப்பர்.

அவர்கள் மீது உங்கள் ஆசைகளை திணித்து, மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி தவறான முடிவுகளை எடுக்க பெற்றோர் காரணமாகி விடக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News