தமிழ்நாடு செய்திகள்

சென்னை-புறநகர் பகுதியில் விடிய, விடிய பலத்த மழை

Published On 2022-12-25 10:02 IST   |   Update On 2022-12-25 10:02:00 IST
  • மெரினா கடற்கரையில் பலத்த மழையின் காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி உள்ளது.
  • இன்று காலை அதிகமான தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை இல்லாமல் இருந்தது. பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 330 கி.மீ தூரத்தில் கிழக்கு தென் கிழக்கே நிலை கொண்டு உள்ளது. இது நாளை இலங்கை வழியாக குமரிக்கடல் நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் திடீரென பலத்த மழை கொட்டியது. இது சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கியது. பின்னர் சாரல் மழையாக நீடித்தது.

இந்த மழை விடிய, விடிய நீடித்தது. பின்னர் இன்று காலை 7 மணிக்கு மேல் கனமழை கொட்டியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழை கொட்டியது.

எழும்பூர், ஆவடி, வில்லிவாக்கம், கோயம்பேடு, திருவான்மியூர், மாதவரம், திருவொற்றியூர் ராயபுரம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, கிண்டி, தேனாம்பேட்டை நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்தது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

இன்று கிறிஸ்துமஸ் விடுமுறை நாள் என்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மழையின் காரணமாக சில இடங்களில் ஆட்டோவில் கூடுதல் கட்டணம் செலுத்தி சென்றனர்.

தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை முடிந்து வந்த கிறிஸ்தவர்கள் பலத்த மழையின் காரணமாக சிரமம் அடைந்தனர்.

மெரினா கடற்கரையில் பலத்த மழையின் காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி உள்ளது. இன்று காலை அதிகமான தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழைநீரை மின்மோட்டார் மூலம் அகற்றும் பணி நடந்தது. சாலையின் ஒரு பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் வாகனங்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இதே போல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருத்தணி, திருவாலங்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களிலும் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய, விடிய சாரல் மழையாக பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பலத்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. இதனால் கடலும் சீற்றமாக காணப்பட்டது. கடலோர பகுதிகளான வெண்புருஷம், கொக்கில மேடு, தேவநேரி, சூலேரிக்காடு பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் சமுதாய கூடங்களில் அமர்ந்து வலைகளை பழுது பார்த்து, புதிய வலைகளை மீன்பிடிக்க தயார் செய்து வருகின்றனர்.

மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்லும் வெளிமாநில செவ்வாடை பக்தர்கள் மாமல்லபுரம் வந்து கடலில் குளித்து விட்டு கோவிலுக்கு செல்வது வழக்கம். இன்று அதிகாலை மாமல்லபுரம் வந்த அவர்களும் சாரல் மழையால் திறந்த வெளியில் சமைத்து சாப்பிட சிரமப்பட்டனர்.

Tags:    

Similar News