தமிழ்நாடு

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்வு

Published On 2023-12-12 05:10 GMT   |   Update On 2023-12-12 05:10 GMT
  • அணைகளின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
  • மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 122 அடியை எட்டிய நிலையில் இன்று 3/4 அடி உயர்ந்து 122.70 அடியாக உள்ளது. இன்று மாலைக்குள் அணை நீர்மட்டம் 123 அடியை எட்டிவிடும். 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 134.81 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 135.83 அடியாக உள்ளது.

இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 910 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 104 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணை பகுதியில் 31 மில்லிமீட்டரும், பாபநாசம் அணை பகுதியில் 23 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது.

மாஞ்சோலை வனப்பகுதியிலும் தொடர்ந்து ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. ஊத்து எஸ்டேட் பகுதியில் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்த நிலையில், மாலையில் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 23 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

காக்காச்சி பகுதியில் 19 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை, நாலுமுக்கு எஸ்டேட்டுகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அங்கு தலா 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 5.8 மில்லிமீட்டர் மழை பெய்தது. நெல்லை மாநகர பகுதி மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் தொடர்மழையால் அடவி நயினார் அணையை தவிர மற்ற அணைகள் நிரம்பி விட்டன.

இதனால் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு வானம் மேக மூட்டமாக காட்சியளிக்கிறது.

சிற்றாறு கால்வாய் மூலமாக குற்றாலத்தில் இருந்து வரும் தண்ணீர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்களை நிரப்பி வருகிறது.

பாவூர்சத்திரம் சுற்று வட்டாரத்தில் குற்றாலம் நீர்வரத்து குளங்கள் நிரம்பி விட்ட நிலையில் தற்போது ஆலங்குளம், மாறாந்தை பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது.

சாத்தான்குளம், கயத்தாறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. குலசேக ரன்பட்டினத்தில் 12 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News