பொன்.கவுதமசிகாமணி எம்.பி வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்: சென்னை அமர்வு நீதிபதி உத்தரவு
- 11 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வழக்கு பிறகு கிடப்பில் போடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
- கடந்த 22-ந்தேதி விழுப்புரம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது பொன்முடி ஆஜரானார்.
விழுப்புரம்:
கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கூடுதலாகக் கனிமவளத்துறைக்கும் அமைச்சராக இருந்து வந்தார்.
அந்தக் காலக்கட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூந்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதில் அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யுமான பொன்.கவுதமசிகாமணி, குமாா், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 போ் மீது கடந்த 2012-ம் ஆண்டில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
11 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வழக்கு பிறகு கிடப்பில் போடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 22-ந்தேதி விழுப்புரம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது பொன்முடி ஆஜரானார். பொன்.கவுதமசிகாமணி ஆஜராகவில்லை. பொன்.கவுதமசிகாமணி எம்.பி மீது சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை எம்.பி., எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.