தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் 8 மாதங்களாக சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு

Published On 2023-02-25 15:01 IST   |   Update On 2023-02-25 15:01:00 IST
  • ஆயுதப்படை போலீசார் 51 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து பணி செய்து வருகிறார்கள்.
  • பகலில் 30 போலீசார் அரண் போல நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு நேரத்தில் 21 போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

சென்னை:

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடையேயான மோதல் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்வதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ராயபேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. அலுவலகத்தில் புகுந்து ஓ.பி.எஸ். அணியினர் தாக்குதல் நடத்திய பின்னர் இந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு 24 மணிநேரமும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

ஆயுதப்படை போலீசார் 51 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து பணி செய்து வருகிறார்கள். பகலில் 30 போலீசார் அரண் போல நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு நேரத்தில் 21 போலீசார் கண்காணித்து வருகிறார்கள். அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த சீலை அகற்றக் கோரி கோர்ட்டு உத்தரவிட்ட நேரத்தில் உரிய பாதுகாப்பு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க. தலைமை கழக சாவியை கொடுத்த பின்னர் அ.தி.மு.க. கட்சி பணிகள் அங்கேயே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இப்படி எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக கோர்ட்டு உத்தரவு இருந்த போதிலும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தொடர்ந்து மல்லுக்கட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதன் காரணமாகவே அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பாதுகாப்பு தொடர்ச்சியாக போடப்பட்டு உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இயல்பு நிலை எப்போது திரும்பும் என்கிற எதிர்பார்ப்பும் போலீசார் மத்தியில் நிலவுகிறது.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, அ.தி.மு.க.வில் இரு தரப்புக்கும் இடையே மோதல் சம்பவங்கள் சமீபகாலமாக நடைபெறவில்லை. இதனை கருத்தில் கொண்டு படிப்படியாக பாதுகாப்பை குறைக்கலாமா? என்பது பற்றி ஆலோசித்து வருகிறோம் என்றார்.

Tags:    

Similar News