புவனகிரி அரசு பள்ளி பிளஸ்-1 மாணவியை தாயாக்கிய 10-ம் வகுப்பு மாணவன் மீது போக்சோவில் வழக்கு
- அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்துவரும் 10-ம் வகுப்பு மாணவருடன் பிளஸ்-1 மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
- நாளடைவில் அவர்கள் காதல் வயப்பட்டுள்ளனர். அப்போது அடிக்கடி தனிமையில் சந்தித்ததால் மாணவி கர்ப்பமானார்
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரியில் குறிஞ்சிப்பாடி செல்லும் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு 1200-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியில் உள்ள கழிவறை அருகே தொப்புள் கொடியுடன் ஆண் சிசு இறந்து கிடந்தது. இதனை பார்த்த பள்ளி மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் பள்ளிக்கு விரைந்தனர். இறந்து கிடந்த சிசுவை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அரசு பள்ளியில் படித்து வரும் 11-ம் வகுப்பு மாணவி கழிப்பறையில் பிரசவித்துள்ளார். குறைமாதமாக இருந்ததால் அந்த சிசு இறந்தநிலையில் காணப்பட்டது. அந்த சிசுவை மாணவி முட்புதரில் வீசி சென்றிருப்பது தெரியவந்தது.
அந்த மாணவியிடம் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அருகில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்துவரும் 10-ம் வகுப்பு மாணவருடன் இந்த மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவர்கள் காதல் வயப்பட்டுள்ளனர். அப்போது அடிக்கடி தனிமையில் சந்தித்ததால் மாணவி கர்ப்பமானார். நாளடைவில் மாணவியின் வயிற்றில் சிசு வளரத் தொடங்கியது.
சம்பவத்தன்று மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனே அந்த மாணவி பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றார். அங்கு அவருக்கு குறை மாதத்துடன் குழந்தை இறந்தே பிறந்தது தெரியவந்தது. அந்த சிசுவை மாணவி முட்புதரில் வீசி சென்றுள்ளார். மேற்கண்டவை விசாரணையில் தெரிய வந்தது.
இதுபற்றி அறிந்த தனிப்படை போலீசார் 10-ம் வகுப்பு மாணவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நடந்த சம்பவம் குறித்து மாணவன் போலீசாரிடம் தெரிவித்தார். இதனை போலீசார் ரகசியமாக பதிவு செய்துள்ளனர். மாணவன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மரபணு பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு வந்த பின்னர் மாணவன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.