தமிழ்நாடு

பூலாம்பட்டி காவிரி கரைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் ஓய்வு விடுதி கட்ட எதிர்ப்பு- பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-06-03 06:46 GMT   |   Update On 2023-06-03 06:46 GMT
  • தற்காலிகமாக அப்பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறாது என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
  • பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் பூலாம்பட்டி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

எடப்பாடி:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள மக்கள் பிரச்சனை குறித்து விவரம் வழங்குமாறு கோரியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து எடப்பாடி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய விவரங்களை முதலமைச்சருக்கு அளித்திருந்தார்.

அவற்றில் ஒன்றாக, எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்கி செல்லும் வகையிலான ஓய்வு விடுதி அமைத்து தர கோரி இருந்தார்.

இதனை பரிசீலித்த தமிழக அரசு பூலாம்பட்டி பகுதியில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் ஓய்வு விடுதி, உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கியது.

முதற்கட்டமாக, இன்று சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில் மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யும் பணியினை தொடங்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு திரண்ட அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் சுற்றுலாப் பயணிகள் ஓய்வு விடுதி மற்றும் இதர கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறி, அப்பகுதியில் புதிய கட்டுமானப் பணி தொடங்க எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி-மேட்டூர் பிரதான சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து அப்பகுதிக்கு வந்த உள்ளாட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, தற்காலிகமாக அப்பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறாது என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் பூலாம்பட்டி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News