தமிழ்நாடு

வெளியூர் நபர்களை வெளியேற்ற நடவடிக்கை: லாட்ஜ்-களில் போலீசார் அதிரடி சோதனை

Published On 2024-04-18 06:30 GMT   |   Update On 2024-04-18 06:33 GMT
  • சோதனையின் போது சில இடங்களில் இன்று புறப்பட்டு செல்லலாம் என தங்கியிருந்த வெளிமாநிலத்தவர்கள் எச்சரிக்கையுடன் வெளியேற்றப்பட்டனர்.
  • தொகுதிக்கு தொடர்பில்லாமல் தங்கி இருக்கும் வெளியூர்காரர்கள் அனைவரையும் முழுமையாக வெளியேற்ற போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்ததை தொடர்ந்து தொகுதிகளுக்கு தொடர்பில்லாத வெளியூர்காரர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

தேர்தல் பிரசாரத்துக்காக வெளியூர்களில் இருந்து வந்து தங்கியவர்கள் பிரசாரம் முடிவடைந்த பிறகும் லாட்ஜ்-களில் தங்கியுள்ளார்களா? என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக தமிழகம் முழுவதும் லாட்ஜ்-கள் மற்றும் தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று மாலையில் தொடங்கிய சோதனை விடிய விடிய நடைபெற்றது. இன்றும் சோதனை தொடர்கிறது. போலீசார் நடத்தும் இந்த சோதனையின் போது லாட்ஜ்-களில் தங்கியுள்ளவர்களின் முகவரி மற்றும் அவர்களது அடையாள அட்டை ஆகியவை சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

இந்த சோதனையின் போது சில இடங்களில் இன்று புறப்பட்டு செல்லலாம் என தங்கியிருந்த வெளிமாநிலத்தவர்கள் எச்சரிக்கையுடன் வெளியேற்றப்பட்டனர்.

தேர்தல் நாளில் தேவையில்லாத வெளியூர் நபர்கள் உள்ளூர்களில் தங்கி இருந்தால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உருவாகும் என்பதை கருத்தில் கொண்டே இந்த வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் எழும்பூர், திருவல்லிக்கேணி, பெரியமேடு, கோயம்பேடு உள்பட அனைத்து பகுதிகளிலுமே லாட்ஜ்-களில் போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த சோதனை இன்று பகலிலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இரவிலும் சோதனை நடத்தப்பட உள்ளது. இதன் மூலமாக தொகுதிக்கு தொடர்பில்லாமல் தங்கி இருக்கும் வெளியூர் நபர்கள் அனைவரையும் முழுமையாக வெளியேற்ற போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News