தமிழ்நாடு

தமிழகத்தில் 4 முனைப்போட்டி: வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது

Published On 2024-03-28 05:59 GMT   |   Update On 2024-03-28 06:21 GMT
  • வேட்புமனுக்களில் அதிகபட்சமாக கரூரில் 62 பேர், வடசென்னையில் 54 பேர், கோவையில் 53 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
  • குறைந்தபட்சமாக நாகையில் 13 பேர், சிதம்பரத்தில் 22 பேர் மனுதாக்கல் செய்து உள்ளனர்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் இறங்கி உள்ளது.

இக்கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுதாக்கல் செய்து விட்டனர். இது தவிர சுயேட்சை வேட்பாளர்களும் ஆர்வமுடன் போட்டி போட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். ஆட்டம், பாட்டம், வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக சென்று மனுதாக்கல் செய்ததால் திருவிழா கோலமாக காணப்பட்டது.

வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில் மொத்தம் 1403 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்திருப்பதால் மொத்த வேட்புமனு எண்ணிக்கை 1749 ஆக உள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்களில் அதிகபட்சமாக கரூரில் 62 பேர், வடசென்னையில் 54 பேர், கோவையில் 53 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக நாகையில் 13 பேர், சிதம்பரத்தில் 22 பேர் மனுதாக்கல் செய்து உள்ளனர்.

40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.

இதில் முறையாக பூர்த்தி செய்யாமல் இருந்த மனுக்களும் தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாமல் கையெழுத்திடாமல் இருந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இன்று மாலை 3 மணி வரை மனுக்கள் பரிசீலனை நடைபெறும் நிலையில் ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களது வழக்கறிஞருடன் வந்து வேட்புமனு பரிசீலனையில் கலந்து கொண்டனர்.

யார்-யார் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் அதிகாரிகள் இன்று மாலை வெளியிட இருக்கிறார்கள்.

வேட்பு மனுக்களை திரும்பப் பெற நாளை மறுநாள் (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதில் அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்படும் நிலையில் மாற்று வேட்பாளர்கள் இன்று அல்லது நாளை வாபஸ் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடைந்த பிறகு சனிக்கிழமை மாலை 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு ஒவ்வொரு வேட்பாளருக்கும் உரிய சின்னங்கள் என்ன என்பது அறிவிக்கப்படும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக தேர்தல் துறை செய்து வருகிறது. தேர்தல் பணியில் 7 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஆகியவை அகரவரிசைப்படி அச்சடிக்கும் பணி 30-ந் தேதியில் இருந்து தொடங்கும். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஏற்கனவே முதற்கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பயிற்சிகள் அடுத்த வாரம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் இளம் தலைமுறை வாக்காளர்களிடையே வாக்களிப்பதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

10 லட்சத்து 90 ஆயிரத்து 547 வாக்காளர்கள் முதல் முறையாக வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இதனால் இளம் வாக்காளர்களை கவரும் வகையில் வேட்பாளர்கள் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு மாநில செயலாளர்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டனர்.

சனிக்கிழமை வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியான பிறகு தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News