எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி 3 தொகுதிகளில் போட்டி
- எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு போட்டியாக புலிகேசி நகர் தொகுதியில் ஓ.பி.எஸ்.சும் தனது அணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- கர்நாடக சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலில் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நெடுஞ்செழியன் நிறுத்தப்படுகிறார்.
சென்னை:
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டி.அன்பரசன் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர் கர்நாடக மாநில அ.தி.மு.க. அவைத்தலைவராக உள்ளார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு போட்டியாக அதே புலிகேசி நகர் தொகுதி உள்பட 3 தொகுதிகளில் ஓ.பி.எஸ்.சும் தனது அணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலில் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நெடுஞ்செழியன் நிறுத்தப்படுகிறார்.
கோலார் தங்கவயல் சட்டமன்ற தொகுதியில் கர்நாடக மாநில தலைவர் அனந்தராஜ், காந்திநகர் சட்டமன்ற தொகுதியில் மாநில செயலாளர் குமார் ஆகியோர் நிறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.