தமிழ்நாடு

கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை தொடர்ந்து உயர்வு

Published On 2023-10-28 04:45 GMT   |   Update On 2023-10-28 05:53 GMT
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள வெங்காயத்தின் அறுவடை தொடர்ந்து தாமதமாகி உள்ளது.
  • முதல் ரக நாசிக் வெங்காயம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.64-க்கு விற்கப்படுகிறது.

போரூர்:

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.

கடந்த மாதம் வரை வெங்காயம் ஒரு கிலோ ரூ.20-க்கு மட்டுமே விற்கப்பட்டது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள வெங்காயத்தின் அறுவடை தொடர்ந்து தாமதமாகி உள்ளது. மேலும் விவசாயிகளிடம் மிகவும் குறைந்த அளவிலான வெங்காயம் மட்டுமே கையிருப்பில் உள்ளது.

இதனால் அங்கிருந்து வரும் வெங்காயத்தின் வரத்து திடீரென பாதியாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே வெங்காயம் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனை கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று அதன் விலை மேலும் அதிகரித்து உள்ளது.

முதல் ரக நாசிக் வெங்காயம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.64-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் வெளி மார்க்கெட்டுக்கு உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 வரை விற்கப்படுகிறது. இதே நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில் வெங்காயத்தின் விலை சதம் அடிக்கும் என்று வெங்காயம் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News