தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வத்தின் 'இரட்டை இலை' கனவு பலிக்க வாய்ப்பில்லை- தராசு ஷியாம் கருத்து

Published On 2024-02-06 05:40 GMT   |   Update On 2024-02-06 05:40 GMT
  • அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் சின்னங்கள் என்பது தேர்தல் ஆணையத்தின் சொத்து.
  • ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் முடக்கியிருக்க முடியும்.

சென்னை:

அ.தி.மு.க. கட்சி சின்னம், கொடி அனைத்தும் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனாலும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து உரிமையை மீட்போம் என்று கூறி வருகிறார்.

வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணியில் தான் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னமும் தங்களுக்கு கிடைக்கும் என்று கூறி உள்ளார். அதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி தராசு ஷியாமிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-


அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் சின்னங்கள் என்பது தேர்தல் ஆணையத்தின் சொத்து. தற்காலிகமாக அதை பயன்படுத்தும் உரிமையை மட்டும் அரசியல் கட்சிகளுக்கு வழங்குகிறது. அதற்கும் சில விதிமுறைகளை வைத்துள்ளது.

அ.தி.மு.க.வில் பிரச்சினைகள் எழுந்து எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் கோர்ட்டில் வழக்காடியதில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு இரட்டை இலை கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து இருப்பது ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கும் மூல வழக்கை அடிப்படையாக வைத்து தெரிவித்து இருப்பார். ஆனால் அந்த வழக்கும் அவருக்கு சாதகமாக இருக்க வாய்ப்பில்லை.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி இருக்கிறார். அந்த அப்போதைய சூழ்நிலை வேறு.


அப்போதும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்த போது தேர்தல் ஆணையம் இரு தரப்பிடமும் கேட்டுத் தான் முடிவு செய்ய முடியும் என்று கூறியது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் முடக்கியிருக்க முடியும். ஆனால் அதை செய்யவில்லை. அதைதொடர்ந்து தற்காலிகமாக பயன்படுத்தும் உரிமை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழங்கப்பட்டது.

ஆனால் இப்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக வழங்கப்பட்டிருக்கிறது.

இனி மூல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வைத்து இடைக்கால தடை வாங்கலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் கருதலாம். அப்படியானாலும் இருதரப்புக்கும் சாதகமாகவே இருக்கும். எனவே ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News