தமிழ்நாடு செய்திகள்

மாநில விருது பெற்ற தமிழ் அறிஞர்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு கோரிக்கை

Published On 2023-06-29 14:03 IST   |   Update On 2023-06-29 14:03:00 IST
  • தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும், ‘கனவு இல்லத் திட்டம்’ என்ற ஒரு திட்டத்தை அறிவித்தது.
  • தி.மு.க. ஆதரவு தமிழறிஞர்கள் மட்டுமே பயன்பெறும் நிலை உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழின் பெருமையை தளராது உயர்த்திப் பிடித்து வரும் தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்குவதை தாய்மொழிக்கு செய்யும் தொண்டாக தமிழ்நாடு அரசு பல ஆண்டு காலமாக மேற்கொண்டு வருகிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும், 'கனவு இல்லத் திட்டம்' என்ற ஒரு திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின்படி சாகித்திய அகாடமி விருது, ஞானபீட விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது மற்றும் தமிழ் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு விருதினைப் பெற்ற தமிழ் அறிஞர்களுக்கு அரசு மூலமாக வீட்டு வசதி வாரியத்தில் உயர் வருவாய் குடியிருப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தி.மு.க. ஆதரவு தமிழறிஞர்கள் மட்டுமே பயன்பெறும் நிலை உள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்லாமல் ஒருதலைபட்சமானதும்கூட பாரதிதாசன் விருது, பாரதியார் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது போன்ற தமிழ்நாடு அரசின் விருதுகளைப் பெற்றவர்களும் கனவு இல்லத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் அறிஞர்களிடையே உள்ளது. எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தமிழக அரசின் விருதுகளைப் பெற்றவர்களும் கனவு இல்லத் திட்டத்தில் சேர்ந்து பயனடைய வழிவகுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News