அதிமுக அணிகள் ஒன்று சேர முட்டுக்கட்டை போடுபவர் இபிஎஸ்: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
- எடப்பாடி பழனிசாமி தனக்கு பதவி கொடுத்தவர்களுக்கே துரோகம் இழைத்தார்.
- விரைவில் எடப்பாடி பழனிசாமி இல்லாத அ.தி.மு.க உருவாகும்.
திண்டுக்கல்:
தொண்டர்கள் உரிமை மீட்பு பயணமாக திண்டுக்கல் நகருக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். இங்கு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாவது,
எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகத்தின் முழு உருவமாவார். தவழ்ந்து சென்று பதவியை பிடித்த அவர் அதற்கு காரணமானவர்களை ஒதுக்கி வைத்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்தார். அப்போது நான் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அவரை சந்தித்தோம். அப்போது சசிகலா, தினகரன் உள்பட அனைத்து அணிகளும் சேர்ந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியின் தவறான நடவடிக்கையால் பாராளுமன்ற தேர்தலில் தேனி தவிர அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இன்றுவரை அணிகள் இணைய முட்டுக்கட்டையாக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. நான் 3 முறை எனது முதலமைச்சர் பதவியை தியாகம் செய்துள்ளேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி தனக்கு பதவி கொடுத்தவர்களுக்கே துரோகம் இழைத்தார். விரைவில் எடப்பாடி பழனிசாமி இல்லாத அ.தி.மு.க உருவாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.