தமிழ்நாடு

நாங்குநேரி சம்பவம்: பள்ளிகள் சாதிவெறியற்ற சமூகநீதிக் கூடங்களாக திகழவேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2023-08-12 05:41 GMT   |   Update On 2023-08-12 05:41 GMT
  • பள்ளியில் மாணவர் சின்னத்துரை தொடர்ந்து சக மாணவர்கள் சிலரால் சாதிய அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்துள்ளார்.
  • பள்ளிகள் தான் மாணவர்களை வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தும் நாற்றங்கால்கள்

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அரசு பள்ளி மாணவர் சின்னத்துரை அவரது வீட்டில் வைத்து 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்டதும், அதை தடுக்க முயன்ற அவரது சகோதரி சந்திரா செல்வினும் வெட்டுக்காயங்களுக்கு ஆளாகி உயிருக்குப் போராடுவதும் வேதனையளிக்கின்றன. பள்ளியில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ள செய்திகள் மனதிற்கு மிகுந்த கவலையளிக்கின்றன.

பள்ளியில் மாணவர் சின்னத்துரை தொடர்ந்து சக மாணவர்கள் சிலரால் சாதிய அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்துள்ளார். அது குறித்து பள்ளி நிர்வாகத்தில் புகார் செய்ததன் காரணமாகவே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிக்கிறது. மாணவர் சின்னத்துரை மீது ஏவப்பட்ட அடக்குமுறைகள் தொடக்கத்திலேயே தடுக்கப்பட்டிருந்தால், அவருக்கும், அவரது சகோதரிக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அவர்கள் தாக்கப்பட்ட அதிர்ச்சி தாளாமல் அவர்களின் தாத்தா கிருஷ்ணன் உயிரிழந்ததும் நடந்திருக்காது.

பள்ளிகள் தான் மாணவர்களை வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தும் நாற்றங்கால்கள். அங்கு சாதி வெறிக்கு இடமளிக்கப்படக் கூடாது. அவை சமூகநீதிக் கூடங்களாக திகழ வேண்டும். அதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமோ, அவை அனைத்தையும் ஒட்டு மொத்த சமுதாயமும் மேற்கொள்ள வேண்டும்.

நாங்குநேரியில் நடந்தது போன்ற கொடூரம் இனி தமிழ்நாட்டில் எங்கும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கொடிய குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீதும், அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News