தமிழ்நாடு செய்திகள்

எண்ணெய் கழிவுகள் தேங்கிய இடத்தில் அமைச்சர் உதயநிதி ஆய்வு

Published On 2023-12-15 14:47 IST   |   Update On 2023-12-15 14:47:00 IST
  • எண்ணெய் கழிவுகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை நாசப்படுத்தியது.
  • நவீன எந்திரங்கள் மூலமாகவும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னை:

எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பகுதியில் மிச்சாங் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எண்ணெய் கழிவுகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை நாசப்படுத்தியது. பின்னர் எண்ணூர் முகத்துவார பகுதியில் போய் கடலில் கலந்தது.

இந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந் தேதியில் இருந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 75 படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றி வருகிறார்கள். நவீன எந்திரங்கள் மூலமாகவும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எண்ணூர் முகத்துவார பகுதியில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும் இடத்தை அமைச்சர் உதயநிதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் மெய்யநாதன், கலாநிதி வீராசாமி எம்.பி., கே.பி.சங்கர் எம்.எல்.ஏ., சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷனர் ராதாகிருஷ்ணன், மண்டலக் குழு தலைவர் தனியரசு மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் எப்படி நடைபெற்று வருகிறது? பணிகள் முடிய இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்பது பற்றி உதயநிதி, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். எண்ணெய் கழிவுகளால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மீனவர்கள் அமைச்சர் உதயநிதியிடம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் பாதிப்புகள் பற்றி எடுத்துக் கூறி முறையிட்டனர்.

எண்ணெய் கழிவுகளால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புகளை விரைந்து சரி செய்து விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என்றும் மீனவர்கள் முறையிட்டனர். கோரிக்கை மனுக்களையும் வழங்கினார்கள்.

மீனவர்களின் குறைகளை கவனமுடன் கேட்டுக் கொண்ட அமைச்சர் உதயநிதி அரசு நிச்சயம் உரிய உதவிகளை செய்யும் என்று உறுதி அளித்தார்.

Tags:    

Similar News