தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Published On 2023-08-23 12:45 IST   |   Update On 2023-08-23 12:45:00 IST
  • சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்க கோரி அமலாக்கத்துறையினர் தூத்துக்குடி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
  • வழக்கு விசாரணையை செப்டம்பர் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தூத்துக்குடி:

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்சஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2020-ம்ஆண்டு சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது.

இதற்கிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்க கோரி அமலாக்கத்துறையினர் தூத்துக்குடி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இதன் மீதான விசாரணை கடந்த 20-ந்தேதி நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கு ஆகஸ்ட் 23-ந்தேதி நடைபெறும் என அறிவித்தார். அதன்படி இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை வந்தது. அப்போது இருதரப்பினரும் ஆஜராகவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News