தமிழ்நாடு

3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கியிருந்த அமைச்சர் மீட்பு

Published On 2023-12-20 07:48 GMT   |   Update On 2023-12-20 07:48 GMT
  • ஏரல் பகுதியின் சாலை பகுதிகள் முழுவதும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டது.
  • தொலை தொடர்பு சாதனங்களும் இயங்கவில்லை.

உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17-ந்தேதி அதீத கனமழை பெய்தது.

இதில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் பல குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது.

இதற்கிடையே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினருடன் ஈடுபட்டார். 17-ந்தேதியில் சாத்தான்குளம் பகுதியில் கொட்டும் மழையில் ஜே.சி.பி. எந்திரத்தில் சென்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள முகாம்களுக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், போர்வை உள்ளிட்டவைகளையும் வழங்கினார்.

தொடர்ந்து அவர் அங்கிருந்து ஏரல் பகுதிக்கு சென்றார். அப்போது கனமழை காரணமாக ஏரல் தாமிரபரணி ஆற்று பாலம் மூழ்கியது. மேலும் ஏரல் பகுதியின் சாலை பகுதிகள் முழுவதும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டது. மேலும் தொலை தொடர்பு சாதனங்களும் இயங்கவில்லை.

இதனால் மீட்பு பணிக்கு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 3 நாட்களாக ஏரலில் சிக்கி கொண்டார்.


அங்கு பொதுமக்களுடன் வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் பொதுமக்களுடன் நிவாரண உதவிகளை செய்தார். எனினும் கடும் வெள்ளம், தொலை தொடர்பு சேவை பாதிப்பு, சாலை துண்டிப்பு காரணமாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு செல்ல முடியவில்லை.

இந்நிலையில் இன்று வெள்ளம் ஓரளவு வடிந்ததால் மீட்பு குழுவினரும், தீயணைப்பு துறையினரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.

Tags:    

Similar News