மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: வினாடிக்கு 2,938 கன அடி நீர் வருகிறது
- அணையில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி நடப்பாண்டு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய உரிய தண்ணீரை திறந்து விடாமல் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழை மேட்டூர் அணைக்கு கைகொடுத்து வருகிறது. பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பொழிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு ஓரளவு நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று 2 ஆயிரத்து 844 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 2 ஆயிரத்து 938 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று முன்தினம் 40.38 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 39.75 அடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் மேலும் சரிந்து 39.13 அடியானது.
நீர் திறப்பு தொடர்ந்து 6,500 கன அடி அளவில் நீடித்தால் இன்னும் 3 நாட்களுக்கு மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும் சூழல் உருவாகி உள்ளது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.