தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் தினமும் 1 அடி சரிவு

Published On 2023-06-29 10:02 IST   |   Update On 2023-06-29 10:02:00 IST
  • மேட்டூர் அணைக்கு நேற்று 226 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 121 கனஅடியாக சரிந்துள்ளது.
  • நேற்று முன்தினம் 92.40 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 91.43 அடியானது.

சேலம்:

தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால், காவிரியில் நீர்வரத்து மிகவும் குறைவாகவே வந்து கொண்டிருக்கிறது.

ஒகேனக்கல் காவிரியில், கடந்த 17 நாட்களாக நீர்வரத்து 1000 கனஅடியாக இருந்தது. இந்த நிலையில், நேற்று முதல் 800 கன அடியாக சரிந்தது. இதனால், அங்குள்ள ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகள், தண்ணீரின்றி வறண்டு பாறைக்காடாக தென்படுகிறது.

அதே போல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் வெகுவாக சரிந்துள்ளது. கடந்த ஜூன் 12-ந்தேதி, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 727 கன அடியாகவும், நீர்மட்டம் 103.41 அடியாகவும், நீர் இருப்பு 69.33 டி.எம்.சி.யாகவும் இருந்தது.

ஆனால், டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தினமும் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நீர்வரத்தும் ஆயிரம் கனஅடிக்கும் கீழ் குறைந்தது. வரத்தை காட்டிலும், நீர் திறப்பு பலமடங்கு அதிகமாக இருந்ததால், அணையின் நீர்மட்டம் மளமளவென சரியத் தொடங்கியது.

இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, கர்நாடக அணைகளில் இருந்து, தமிழகத்திற்கு நடப்பு பருவத்திற்கு 9 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். ஆனால், கர்நாடக அணைகளிலும் போதிய அளவு தண்ணீர் இருப்பு இல்லை.

தற்போது 22 சதவீத தண்ணீர் மட்டுமே அங்குள்ள அணைகளில் இருப்பு உள்ளது. 124.8 அடி உயரமும், 49 டி.எம்.சி கொள்ளளவும் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 82 அடியாகவும், நீர் இருப்பு 12 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

அதே போல், 69 அடி உயரமும், 19 டி.எம்.சி கொள்ளளவும் கொண்ட கபினியின் நீர்மட்டம், 31 அடியாகவும், நீர் இருப்பு 4 டி.எம்.சி.யாகவும் உள்ளது. இதனால், தென்மேற்கு பருவமழை பெய்தால் மட்டுமே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று 226 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 121 கனஅடியாக சரிந்துள்ளது. அதே சமயம், அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 13 ஆயிரம் ஆயிரம் கனஅடியாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1 அடி வீதம் சரிந்து வருகிறது.

நேற்று முன்தினம் 92.40 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 91.43 அடியானது.

Tags:    

Similar News