தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1001 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2023-01-30 09:21 IST   |   Update On 2023-01-30 09:21:00 IST
  • மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 971 கன அடியிலிருந்து, 1001 கனஅடியாக சற்று அதிகரித்து உள்ளது.
  • தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம்:

மேட்டூர் அணையில் இருந்து, ஆண்டு தோறும் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டால், மீண்டும் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் வரை குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பது வழக்கம். நேற்று முன்தினம் மாலை, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, காவிரி டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காகவும், காவிரி கரையில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களுக்காகவும், மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை 9 மணி முதல் விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தேவை அதிகரிக்கும் பட்சத்தில் 2 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படும்.

இந்த நிலையில், காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும், தொடர்ந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது. நேற்று காலை 103.74 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.71 அடியாக உள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 971 கன அடியிலிருந்து, 1001 கனஅடியாக சற்று அதிகரித்து உள்ளது. தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News